பெரியார் - பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்: கவர்னர் உத்தரவு

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
பெரியார் - பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்: கவர்னர் உத்தரவு
Published on

சென்னை:

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கான தேர்வு குழுவுக்கு முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதரை அமைப்பாளராகவும், பேராசிரியர் ஆர்.மணியனை செனட் பிரதிநிதியாகவும், பேராசிரியர் எம்.என்.பொன்னுசாமியை சிண்டிகேட் பிரதிநிதியாகவும் கவர்னர் நியமித்து உத்தரவிட்டு இருந்தார்.

இதுபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கான தேர்வு குழுவுக்கு மாநில திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயரை அமைப்பாளராகவும், பேராசிரியர் ஆர்.வெங்கட்ராமனை செனட் பிரதிநிதியாகவும், வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய தலைவர் எஸ்.சிவசுப்பிரமணியனை சிண்டிகேட் பிரதிநிதியாகவும் கவர்னர் நியமித்து இருந்தார்.

இந்த தேர்வு குழுக்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவிகளுக்காக 3 பெயர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்தன. அந்தவகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பி.குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.மணிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிகாலம் 3 ஆண்டுகளாகும்.

இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com