சேலம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் இன்று ஆய்வு

சேலம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். கவர்னர் வருகையை யொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் இன்று ஆய்வு
Published on

சேலம்:

சேலம் பெரியார் பல்கலைகழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் அகாடமி சார்பில் தேசிய அளவிலான ஒருவார மாநாட்டிற்கான தொடக்க விழா இன்று (18-ந்தேதி) காலை தொடங்கியது.

இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ஏரிக்காடு கிராமத்துக்கு கவர்னர் செல்கிறார். அங்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளை பார்வையிடுகிறார். பனங்காட்டூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்கிறார். மீண்டும் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிக்கைக்கு வரும் கவர்னர் அங்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

தொடர்ந்து கலெக்டர் ரோகிணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது சேலம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

மாலை 4 மணி அளவில் அஸ்தம்பட்டி, கொண்டாலாம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை கவர்னர் பார்வையிடுகிறார். பின்னர் பழைய, புதிய பஸ் நிலையம், ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் துப்புரவு பணியை தொடங்கி வைப்பதோடு, மக்களை சந்திக்கிறார்.

இரவு 10.20 மணிக்கு பெங்களூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கன்னியாகுமரி புறப்பட்டு செல்கிறார். அங்கு ஒக்கி புயல் பாதிப்பை பார்வையிட நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை வரவேற்கிறார்.

கவர்னர் வருகையை யொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கவர்னர் சேலத்திற்கு வந்தார். அவரை கலெக்டர் ரோகிணி வரவேற்றார்.

கவர்னர் வருகையை யொட்டி சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், செவ்வாய் பேட்டை, 3 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் இரவோடு இரவாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com