கோவையில் உத்தரவை மீறி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்த அரசு பள்ளிகள்

கோவையில் உத்தரவை மீறி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்த அரசு பள்ளிகள் பணத்தை திருப்பி கொடுக்க முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியண்ணன்புதூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரங்கராஜ் என்பவர் தனது மகனை 6-ம் வகுப்பு சேர்ப்பதற்காக சென்றார்.

அப்போது பள்ளியில் இருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதவள்ளி என்பவர் ரங்கராஜிடம் 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்கு கல்வி கட்டணமாக ரூ. 1,650 செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கேட்டதற்கு பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணம் வசூலிக்கப்படுவதாக கூறினார்.

பின்னர் ரங்கராஜ் வங்கியில் ரூ. 1,300 பணமும், நேரடியாக பள்ளியில் ரூ. 350 கட்டணமாக செலுத்தினார். பின்னர் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷாவிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து புகார் செய்தார். மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தியதில் கல்வி கட்டணம் வசூல் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வசூல் செய்யப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதே போல குளத்துப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகனை தொண்டாமுத்தூரில் உள்ள ஆண்கள் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக சென்றார். அந்த மாணவர் ஏற்கனவே இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

அப்போது கல்வி கட்டணமாக ரூ.1,300 முதல் ரூ. 2ஆயிரம் ஒவ்வொரு வருடமும் கட்டணமாக வசூலித்தனர். தற்போது பிளஸ்-1 வகுப்பில் கலை பிரிவில் சேர்வதற்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இது குறித்து செல்வராஜ் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா விசாரணை நடத்தி வசூல்செய்யப்பட்ட கட்டணத்தை திருப்பி செலுத்தும்படி உத்தரவிட்டார். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பிளஸ்-1 வகுப்பு சேராமல் இருந்து 4 மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் படியும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கலெக்டர் ராஜாமணி அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் கேட்டால் உடனடியாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com