சேலத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க நடவடிக்கை

சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

சேலம்:

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து வருகிற 7-ந் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் நேற்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் மட்டும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கியது. ஆனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் விரைவு போக்குவரத்து கழக அலுவலகத்தில் முன்பதிவு நேற்று தொடங்கப்படவில்லை. இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனினும் சேலம் மணக்காடு பகுதியிலுள்ள விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சேலம் கிளை மேலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:-

சேலத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 64 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் 5 மாதங்களாக இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் என்ஜின் பழுது பார்க்கும் பணிகளும், பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேசமயம் சேலத்தில் இருந்து எந்தெந்த வழித்தடங்களில் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது? எந்த நேரத்தில் புறப்படுகிறது? என்ற விவரங்களை சென்னை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதன்படி அந்த விவரங்கள் அனைத்தும் அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் எத்தனை பஸ்கள் இயக்க வேண்டும் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனைப்படி சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விரைவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அதைபோல் தமிழகத்தில் 7-ந் தேதி முதல் பயணிகள் ரெயில்களை இயக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தி தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை-சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்டிரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்-கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மட்டும் சேலம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட தண்டவாளங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரெயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ரெயிலில் பயணிக்க உள்ள அனைத்து பயணிகளும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில், கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். ரெயிலில் பயணம் செய்யும் நபர்கள் மட்டுமே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com