‘செட்டாப்’ பாக்சிற்கு பணம் கேட்டால் கேபிள் லைசென்சு ரத்து: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எச்சரிக்கை

அரசு வழங்கும் செட்டாப் பாக்சிற்கு ரூ.200 மட்டும் டெபாசிட்டாக பெற வேண்டும். கூடுதலாக வசூலித்தால் ஆபரேட்டர்களின் லைசென்சு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘செட்டாப்’ பாக்சிற்கு பணம் கேட்டால் கேபிள் லைசென்சு ரத்து: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எச்சரிக்கை
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு ரு.125 மாத கட்டணத்தில் 150 சேனல்கள் வழங்கப்படுகின்றன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 64 லட்சம் பேர் அரசு கேபிள் டி.வி.யை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

அரசு கேபிள் டி.வி. சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு கேபிள் டி.வி. இணைப்பை பெற மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இணைப்பு கேட்பவர்களுக்கு கொடுப்பதற்கு செட்டாப் பாக்ஸ் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இதுவரை 32 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே வினியோகிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாக அரசு கேபிள் இணைப்பை பெற முடியாதவர்கள் தனியார் பக்கம் செல்கிறார்கள்.

இதற்கிடையில் அரசு வழங்கும் செட்டாப் பாக்சிற்கு ரூ.200 மட்டும் டெபாசிட்டாக பெற வேண்டும். கூடுதலாக எவ்வித தொகையும் பொதுமக்களிடம் பெறக்கூடாது என கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செட்டாப் பாக்ஸ் கொடுப்பதற்கு வேறு எந்த கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் ஆபரேட்டர்களின் லைசென்சு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொதுநல சங்க தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:-

அரசு முன்பு ரூ.70 கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கியது. அப்போது அதில் ரூ.50 கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கும், ரூ.20 அரசுக்கும் சென்றது. ஆனால் இப்போது ரூ.147.05 (ஜி.எஸ்.டி. சேர்த்து) கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதில் வரி போக 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கும் கிடைக்கிறது.

இதன் மூலம் அரசு மறைமுகமாக செட்டாப் பாக்ஸ் கட்டணத்தை மக்களிடம் பெற்று கொள்கிறது. இலவசம் என்பது தவறு. 3 வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து மறைமுகமாக கட் டணத்தை வசூலிக்கிறது.

மேலும் அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸ் இன்னும் தாராளமாக கிடைக்க வில்லை. தட்டுப்பாட்டில் தான் உள்ளது. அரசு கட்டணத்தை விட தனியார் கட்டணம் குறைவாக இருப்பதால் பலரும் இப்போது தனியாரிடம் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com