குடியாத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து- தந்தை, மகன் பலி

குடியாத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்சையும், ஆட்டோவையும் காணலாம்
விபத்துக்குள்ளான பஸ்சையும், ஆட்டோவையும் காணலாம்
Published on

குடியாத்தம்:

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு சந்தியா (14) என்ற மகளும், மணி என்ற சஞ்சய் (12) என்ற மகனும் உள்ளனர். சந்தியா 10-ம் வகுப்பும், மணி 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதிகா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் சந்தியாவும், மணியும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த பிராமணமங்கலம் என்ற கிராமத்தில் பாட்டி சாவித்திரி வீட்டிற்கு வந்துவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா சென்னை புளியந்தோப்பில் இருந்து பிராமணமங்கலத்துக்கு வந்தார். நேற்று மதியம் சிவாவும். மணியும் குடியாத்தத்தில் உள்ள கடைக்கு ஆட்டோவில் வந்தனர். குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் அருகே வரும்போது, குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் படுகாயம் அடைந்து ஆட்டோவில் சிக்கி இருந்த சிவா மற்றும் மணியை அப்பகுதி பொதுமக்கள் போராடி மீட்டனர். ஆனால் சில நிமிடங்களிலேயே தந்தையும், மகனும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com