கூர்க்கா கட்சி-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
கூர்க்கா கட்சி-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் பகுதியை தனியாக பிரித்து புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து கலவரமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மிரிக் நகரில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த நகரில் கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசுக்கும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.

கூர்க்காலாந்து பிரச்சினை தொடர்பாக விவசாய அமைப்பு ஒன்று இந்த நகரின் மார்க்கெட் பகுதியில் போராட்டம் நடத்தியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் தன்ராஜ் தமாங்கை கூர்க்கா ஜன முக்தி மோர்ச்சா கட்சியினர் தாக்கினார்கள்.

இதனால் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இரு தரப்பினரும் பயங்கரமாக மோதி கொண்டனர். போலீசார் அவர்களை அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் தடியடி நடத்தினார்கள். இதற்கும் கட்டுப்படாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். 2 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த கலவரத்தில் ஆசிஷ் தமாங் என்பவர் உயிர் இழந்தார். இவர், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியியை சேர்ந்தவர். போலீஸ் துப்பாக்கி சூட்டில்தான் அவர் இறந்ததாக அந்த கட்சியினர் கூறி உள்ளனர். ஆனால், போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை. நாங்கள் துப்பாக்கி சூடே நடத்தவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறினார்கள். இந்த கலவரத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com