இளம் வயதில் ஆபாச படம் பார்த்து சிக்கிய அனுபவம் - மனோகர் பாரிக்கர் மனம் திறந்தார்

“சாதாரண சினிமா படங்களை மட்டுமல்ல, வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கிற படங்களையும் பார்த்திருக்கிறேன்” என கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தனது அனுபவத்தை இப்படி மனம் திறந்தார்.
இளம் வயதில் ஆபாச படம் பார்த்து சிக்கிய அனுபவம் - மனோகர் பாரிக்கர் மனம் திறந்தார்
Published on

பனாஜி:

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் பனாஜியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு துடிப்பான மாணவர், “இளம் வயதில் நீங்கள் எப்படிப்பட்ட சினிமா படங்களை பார்த்தீர்கள்?” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு மனோகர் பாரிக்கர், “சாதாரண சினிமா படங்களை மட்டுமல்ல, வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கிற படங்களையும் பார்த்திருக்கிறேன்” என கூறிவிட்டு, தனது அனுபவத்தை இப்படி மனம் திறந்தார்.

“அப்போது பரபரப்பாக பேசப்பட்ட ஒரு ‘ஏ’ படத்துக்கு நானும், என் சகோதரர் அவ்தூத்தும் போய் இருந்தோம். இடைவேளையின்போது விளக்குகள் எரிந்தன. எனக்கு அடுத்த இருக்கையில் இருந்தவர், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். அவர் தினமும் மாலையில் என் அம்மாவுடன் பேசுவார். எனவே இன்றைக்கு தொலைந்தோம் என்று சொல்லிக்கொண்டேன்.

உடனே தியேட்டரில் இருந்து வெளியேறினோம். எங்களை காப்பாற்றிக் கொள்ள திட்டம் போட்டோம். அம்மா, நாங்கள் சினிமாவுக்கு போனோம். அது ஆபாச படம் என்று தெரியாது. அதான், பாதியிலே எழுந்து வந்து விட்டோம். ஆனால் நமது பக்கத்து வீட்டுக்காரர்கூட படம் பார்க்க வந்திருந்தார் என்று சொன்னேன்.

மறுநாள் நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே என் அம்மாவிடம் அவர் வந்து, மனோகரும், அவ்தூத்தும் சினிமா பார்த்தார்கள் என்று சொன்னார். அம்மாவோ, அவர்கள் என்ன படம் பார்த்தார்கள் என்பது எனக்கு தெரியும், அதுசரி, நீங்கள் ஏன் அந்தப் படம் பார்க்க போனீர்கள்? என்று கேட்டாரே பார்க்கலாம். அந்த மனிதர் வாய் அடைத்துப்போனார்.

இவ்வாறு தனது இளம் வயது அனுபவத்தை மனோகர் பாரிக்கர் சிரித்துக்கொண்டே பகிர்ந்து கொண்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com