கோவா: துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

கோவா மாநிலத்தில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

பனாஜி:

கோவா மாநிலம் மபுசா நகரின் மையப் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  நேற்று மாலை ஊழியர்கள் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்ததும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர்கள், வங்கி மேலாளர் மற்றும் கிளர்க்கை தாக்கியதுடன் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தனர்.

பின்னர் வங்கியில் இருந்த 13 லட்சம் ரூபாய் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது உஷாரான பொதுமக்கள், இரண்டு நபர்களை சுற்றி வளைத்து பிடித்து கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். மற்ற மூன்று கொள்ளையர்களும் பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பொதுமக்களால் தாக்கப்பட்ட 2 கொள்ளையர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த விரிவான தகவல்  மற்றும் விசாரணை விவரங்களை அளிக்கும்படி முதல்வர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com