

சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தடுப்பூசி, தாய்சேய் நலம், பொது சுகாதாரம் பேணுதல், அவசர சிகிச்சை, பல்நோக்கு சிகிச்சை முறைகள், பல்வேறு அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு உரிய அரசு மருத்துவர்களையும், அரசு சிறப்பு மருத்துவர்களையும் கொண்டு நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அரசு மேற்படிப்புக்காக இட ஒதுக்கீடு பெற்று மருத்துவ படிப்பை படித்த பிறகு சிறப்பு மருத்துவர்களாக மக்களின் சுகாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பணி மூப்பு வரை அரசு மருத்துவர்களாக பணிபுரியும்போது ஏழை, எளிய மக்களுக்கான சிறப்பு மருத்துவ சேவை பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக இளநிலை மருத்துவம் முடித்த மருத்துவர்கள் தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சியுற்ற பின்பு கிராமப்புற, மலைப் பிரதேச சுகாதார நிலையங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு மருத்துவர்களின் சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் எண்ணிக்கையினை உயர்த்தும் வகையிலும் தமிழக அரசு மருத்துவ மேற்படிப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்கி வந்தது.
இந்த முக்கியமான சுகாதாரக் கொள்கை கடந்த ஆண்டு, இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளை காரணம் காட்டி, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதனால் பல மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கு செல்வது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஒற்றை இலக்க எண்ணிலும் அரியானா போன்ற மாநிலத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கான அரசு சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து, சேவையில் தடை ஏற்படும் போது பெரிதும் பாதிக்கப்படுவது அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான். இது போன்ற ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்கவும், மாநில உரிமையை பாதுகாக்கவும் மருத்துவ மேற்படிப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு அவசியத் தேவை என்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
அதற்காக அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews