ஜிகே வாசன்
ஜிகே வாசன்

நதிநீர் பிரச்சினை: தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை தீர்வை தரும் - ஜிகே வாசன்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனை நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை சந்தித்து நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை இரு மாநிலங்களுக்கும் பயன் தரும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
Published on

சென்னை:

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனை நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை சந்தித்து நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை இரு மாநிலங்களுக்கும் பயன் தரும்.

கடந்த 15 ஆண்டுகளில் இரு மாநில முதலமைச்சர்கள் இடையே நடைபெற இருக்கின்ற இந்த சந்திப்பானது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக 2004-ம் ஆண்டில் தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், கேரள முதல்-அமைச்சராக இருந்த உம்மன் சாண்டியும் சென்னையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசியது பயன் தந்தது.

தற்போதைய சந்திப்பின் போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்துவது குறித்தும், 2000-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய பரம்பிக்குளம்ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் மற்றும் ஆனைமலை, பாண்டியாறு, புன்னம்புழா ஆகியவை குறித்தும் பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவானது தமிழகத்தின் நியாயத்தை அழுத்தமாக எடுத்துரைத்து இரு மாநில நல்உறவுக்கு மேலும் வழி வகுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அண்டை மாநில நதிநீர் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க ஜெயலலிதா ஆட்சி செய்த காலம் முதல் தற்போதைய அ.தி.மு.க அரசு மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பை பெற்றுத்தந்திருக்கிறது.

அந்த வகையில் இப்போதைய பேச்சுவார்த்தையானது நீண்டகாலமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகத் தீர்வு ஏற்படும்.

எனவே தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக கேரள முதல்வரை சந்திக்கும் தமிழக முதல்வரின் முயற்சி தமிழக மக்கள் நலன் காக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com