இரும்பு கடையில் கியாஸ் கசிந்து உரிமையாளர் பலி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இரும்பு கடையில் கியாஸ் கசிந்து உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலியான நாடிமுத்து
பலியான நாடிமுத்து
Published on

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை கீழப்பாளையம் பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருபவர் ஆறுமுகம் மகன் நாடி முத்து (வயது 60).

இவர் நேற்று மாலை வழக்கம் போல பழைய இரும்புகளை வெட்டி விற்பனை செய்வதற்காக இரும்புகளை வெட்ட பயன்படும் அசெட்டிலின் வாயு கொண்டு பழைய இரும்புகளை வெட்டியுள்ளார். அந்த நேரம் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் கியாஸ் பரவியது. இதில் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே நாடிமுத்து பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரவியிருந்த வாயுவை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

அப்போது திடீரென வாயு தாக்கி தீயணைப்பு வீரர் சிவராமன் (47) என்பவர் மயக்கம் அடைந்தார்.

தொடர்ந்து கடையின் உள்ளே வேலை பார்த்தவர்கள், அக்கம் பக்கத்தினரும் மூச்சு திணறி மயக்கம் அடைந்தனர்.

நாடிமுத்துவின் மனைவி வளர்மதி (56), மகள் செல்வி (23), ராஜா (27), கோவிந்தராஜன் (59), நாகராஜன் (45), மாரி கணேஷ் (13), கணேஷ் குமார் (12), சுமதி (40), சிவசங்கரி (30), உள்பட 10 பேர் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக செல்வி, நாகராஜன் மற்றும் ராஜா ஆகிய 3 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கியாஸ் கசிந்து இரும்பு கடை உரிமையாளர் பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com