நடிகர் சூர்யா கேட்ட 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன்

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா கேட்ட 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஜி ராமகிருஷ்ணன்
ஜி ராமகிருஷ்ணன்
Published on

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்தியில் பாரதிய ஜனதா அரசு 2-வது முறையாக அமைந்துள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் தேசிய நகல் கல்வி கொள்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நாடு ழுழுவதும் கல்வித்துறை சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், கல்வியை தனியார் மயமாக்கும் செயலை செய்திட மத்திய அரசு முயற்சி செய்கிறது.

கஸ்தூரி ரங்கன் அறிக்கைப்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதே நேரம் 3 வயது முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகவே வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் தற்போது 50 சதவீத கல்விநிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது. உயர் கல்வியில் 75 சதவீதம் கல்வி நிறுவனங்கள் தனியார் கைகளில் உள்ளது. கல்வியை தனியார் மயமாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து உள்ளார். அவருக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்படுவது வழக்கம். இவர் மீது இன்னும் வழக்கு தொடரப்படவில்லை.

கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1½ லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாறி உள்ளனர்.

தமிழகத்திலும் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு, அதனை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டால் இனி வரும் நாட்களில் கல்வித்துறை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும்.

புதிய கல்வி கொள்கை திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது. அடுத்த கட்டமாக வருகிற 25 தேதி முதல் 30-ந் தேதி வரை 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பொது கூட்டமும் நடத்த உள்ளோம்.

அந்தியோதயா திட்டம் மூலம் ஏழைகளுக்கு 35 கிலோ ரேசன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனை 20 கிலோவாக குறைக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் ரேசன் கார்டுகளை குறைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக நடக்கும் கணக்கெடுப்பை அரசு கைவிட வேண்டும்.

பாராளுமன்ற கூட்ட தொடர் வருகிற 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இக்கூட்ட தொடரில் நே‌ஷனல் மெடிக்கல் கமி‌ஷன் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனை அரசு கைவிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது கட்சி தொண்டர்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடத்துவது வழக்கம்.

இம்முறை ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் ஊர்வலம் நடத்துவோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஊர்வலம் நடத்த அனுமதி தரவேண்டும்.

நாகர்கோவிலில் நடைபெறும் 4 வழிச்சாலை பணி காரணமாக பல்வேறு கால்வாய்கள், குளங்கள் மண் மூடி கிடக்கிறது. இவற்றை உடனே தூர்வார வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com