மீண்டும் நட்பு துளிர்விடுகிறது: தி.மு.க.வுடன் நெருங்கும் வைகோ

தமிழக அரசியலில் சமீப காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள், நீண்ட நாட்களுக்கு பிறகு திமுகவுடன் வைகோ நெருங்கி வருவதை காட்டுவதாக தெரிகிறது.
மீண்டும் நட்பு துளிர்விடுகிறது: தி.மு.க.வுடன் நெருங்கும் வைகோ
Published on

சென்னை:

அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பரும் கிடையாது என்பார்கள். ரெயில் பெட்டி களைப்போல் தேவைப்படும் போது இணைத்துக் கொள்வதும், தேவையில்லாதபோது கழட்டி விடுவதும்தான் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் தேர்தல் கால பரபரப்பு காட்சிகளாக இருக்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் வைகோவை இணைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அதற்கு கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமணத்தை சாக்காக வைத்து பேச்சை தொடங்கினார்கள். மு.க.ஸ்டாலின் திருமண அழைப்பிதழை கொடுக்க வைகோ வீட்டுக்கு சென்றார்.

குடும்ப பாசத்துடன் மீண்டும் தொடங்கிய நட்பின் விளைவால் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ தனது தகுதியாலும், உழைப்பாலும் மு.க.ஸ்டாலின் மிக உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறார்” என்று புகழ்ந்து தள்ளினார்.

அதன்மூலம் தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி உருவாகும் வாய்ப்பு நெருங்கி வந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட சில நெருடல்கள் அவர்களை நெருங்கி விடாமல் செய்து விட்டது.

மீண்டும் எதிர்கோ‌ஷம், எதிரி என்ற நிலையே உருவெடுத்தது. அதன் காரணமாக மக்கள் நல கூட்டணியை வைகோ உருவாக்கினார். அந்த கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும், தி.மு.க.வின் ஆட்சி கனவுக்கு ஆப்பு வைத்தது.

தற்போது மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. ஒரு வலுவான கூட்டணியை அமைக்க விரும்புகிறது. அதற்கு எல்லோரையும் வளைத்துப் போட சந்தர்ப்பம் பார்த்து சமிக்ஞை செய்கிறது.

இந்த வகையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதும் முதல் ஆளாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது ‘அண்ணன் வைகோ’ என்று அவர் அன்புடன் குறிப்பிட்டார். இது மீண்டும் நட்பு மலர வகை செய்தது.

அதைத் தொடர்ந்து கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற கவிக்கோ நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எல்லோருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். வைகோவை ஆரத்தழுவி அன்பு பாராட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைகோ, துரைமுருகனை கதாநாயகன் என்று வர்ணித்தார்.

அடுத்து தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்குகோரி தி.மு.க. நடத்திய மனிதசங்கிலி போராட்டத்தில் ம.தி.மு.க. வுக்கு அழைப்பு விடுக்க கே.பி.ராமலிங்கம் தாயகத்துக்கு நேரில் சென்றார். அவரை ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா வரவேற்று அழைத்து சென்றார்.

அந்த போராட்டத்தில் ம.தி.மு.க.வினர் கலந்து கொள்ளும்படி வைகோ கட்சியினருக்கு கட்டளையிட்டார்.

இப்படி மெல்ல மெல்ல தி.மு.க. கூட்டணிக்கு நகர்ந்து கொண்டிருக்கும் வைகோவை வரவேற்க தி.மு.க.வும் தயாராகி விட்டது.

ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரை தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் இந்த மாதிரி காரியங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறிவிட்டதாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com