பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசியதாக புகார் - நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசிய புகாரில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசியதாக புகார் - நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
Published on

சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. தலைவரார் லோகநாதன், சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், அ.தி.மு.க.(அம்மா) கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத், எங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தாக்கி தரக்குறைவாக மிகவும் இழிவாக பேசி வருகிறார். அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சு பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோதலை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக பட்டினபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபுகுமார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.  

மேலும், இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாஜவினர் புகார் அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர பாஜ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, பட்டினபாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை பாஜவினர் 150க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். ஏற்கனவே முற்றுகையிட போவதை அறிந்த போலீசார் அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் பாஜவினர் கலைந்து சென்றனர்.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், எந்தவிதமான வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்ள தயார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com