தலைமை கழகத்திற்கு தினகரன் வருவதை முறைப்படி அறிவிப்பார்: எம்.எல்.ஏ. வெற்றிவேல்

அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு டி.டி.வி.தினகரன் வருவதை முறைப்படி அறிவிப்பார் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறினார்.
தலைமை கழகத்திற்கு தினகரன் வருவதை முறைப்படி அறிவிப்பார்: எம்.எல்.ஏ. வெற்றிவேல்
Published on

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியினர், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை கட்சி பணிகளில் இருந்து ஓரம் கட்டி வருகின்றனர். அமைச்சர்கள் யாரும் அவரை சந்திப்பது இல்லை.

ஆனாலும் 36 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சில மாவட்ட செயலாளர்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிறகு தினகரன் அமைதியாக இருந்து வருகிறார். தனது ஆதரவாளர்களை வீட்டில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் கட்சி பணியில் மீண்டும் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் வருகிற 5-ந்தேதி அவர் தலைமை கழகத்திற்கு வருவதாகவும் தகவல் வெளியாயின.

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான பி.வெற்றிவேலிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரை ஒதுக்கி விட்டு கட்சி பணியை ஆற்றலாம் என்று கனவு கண்டால் அவர்கள் ஏமாந்து போவார்கள். அவர்களின் கற்பனை கனவுகளுக்கு நான் முட்டுக்கட்டை போடவில்லை.

அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எவ்வித இடையூறும், தொல்லையும் தரவில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.

தலைமை கழகத்திற்கு டி.டி.வி.தினகரன் வருவதை யாரும் தடுக்க முடியாது. அவரும் கோழை அல்ல. தலைமை கழகத்திற்கு அவர் வருவதை முறைப்படி அறிவித்து விட்டுதான் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com