கொரோனா தடுப்பு: இந்தோ-பசிபிக் நாடுகள் கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்தோ-பசிபிக் நாடுகளின் கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியா பங்கேற்று ஆலோசனை நடத்தியது.
ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா
ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா
Published on

சீனாவில் தோன்றி மூன்றே மாதங்களில் உலகம் முழுவதும் பரவி ஊழித்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வீடியோ கான்பிரன்சிங் வழியாக ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்கினார்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஸ்டீபன் பிகன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பங்கேற்று இதர நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலியா, தென்கொரியா, வியட்நாம், நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கலந்துரையாடலின்போது, கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடுதழுவிய அளவிலும் தெற்காசிய பிராந்தியரீதியிலும் இந்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள அதிதீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா எடுத்துரைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com