தாய்-மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி- தடுக்க வந்த மாணவனை கொன்ற மர்ம கும்பல்

திருக்கோவிலூர் அருகே தாய்-மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பலை தடுக்க வந்த மாணவனை அந்த கும்பல் கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#studentkilled #thirukovilur
தாய்-மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி- தடுக்க வந்த மாணவனை கொன்ற மர்ம கும்பல்
Published on

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய  மனைவி ஆராயி(வயது 45). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (22), விஜயகுமார் (19), சமயன்(8) ஆகிய 4 மகன்களும், அஞ்சலாட்சி (17), தனம் (15) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 

ஏழுமலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் பெங்களூருவில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகிறார்கள். அஞ்சலாட்சி திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

ஆராயி தனது இளைய மகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வெள்ளம்புத்தூரில் தங்கி இருந்தனர். தனம் தேவனூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் அதேஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த 21-ந் தேதி இரவு தனது மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோருடன் சமயன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆராயி உள்பட 3 பேரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானான்.

படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.

வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் சிறுமியையும், தாயையும் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதை தடுக்க முயன்ற மாணவன் சமயனை கொடூரமாக தாக்கியதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முன்விரோதம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவன் கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின நல ஆணையத்தில் துணைத்தலைவர் முருகன், சென்னை தேசிய ஆணைய இயக்குனர் மதியழகன், கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு வந்தனர்.

அங்கு கொலை செய்யப்பட்ட மாணவன் சமயனின் வீட்டை பார்வையிட்டனர். அங்கிருந்த ஆராயின் மூத்த மகள் அஞ்சலாட்சி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சமயனின் உறவினர்களிடம் அதிகாரிகள் கூறினர்.

மாணவனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பி ரண்டு வீமராஜ் ஆகி யோர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 7 சப்- இன்ஸ்பெக்டர்கள், 28 போலீசார் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். கொலை நடந்து 7 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தாய்-மகளை கற்பழிக்கும் முயற்சி நடந்துள்ளதா? என போலீசாரிடம் நிருபர்கள் கேட்டபோது, பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் இந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும் என்றனர். #tamilnews  #studentkilled

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com