ஒகி புயலில் மாயமான மேலும் ஒரு குமரி மீனவர் உடல் அடையாளம் தெரிந்தது

கன்னியாகுமரி மாவட்டதில் ஒகி புயலில் மாயமான மேலும் ஒரு குமரி மீனவர் உடல் அடையாளம் தெரிந்தது. அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
ஒகி புயலில் மாயமான மேலும் ஒரு குமரி மீனவர் உடல் அடையாளம் தெரிந்தது
Published on

களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள்.

புயல் தாக்கி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இதுவரை 222 மீனவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. இவர்களில் 171 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள். மற்றவர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் உடல்களை மீட்க தேடுதல்வேட்டை நடந்து வருகிறது. மேலும் கேரள மாநில கடற்கரையில் கரை ஒதுங்கி அடையாளம் காண முடியாத பிணங்களில் மாயமான குமரி மீனவர்களின் உடல்கள் இருக்கிறதா? என்பதை கண்டு பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இதற்காக கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, வேப்பூர் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பிண வறைகளில் இருக்கும் பிணங்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ஜோசப்பாத் என்பவரின் உடல் நேற்று டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அவரது சொந்த ஊரான தூத்தூருக்கு எடுத்து வந்து இன்று  அடக்கம் செய்கிறார்கள். ஜோசப் பாத்துக்கு விஜயா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இது போல நாகப்பட்டிணம், தரங்கம் பாடியைச் சேர்ந்த சஞ்சிகண்ணு என்ற மீனவரின் உடலும் நேற்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சஞ்சிகண்ணு உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

இன்னும் கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் அடையாளம் காணமுடியாத நிலையில் பலரது பிணங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் காண உறவினர்கள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்று வருகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com