காங்கிரஸ் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் பணி: கே.எஸ்.அழகிரி

‘காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் பணி’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri
காங்கிரஸ் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் பணி: கே.எஸ்.அழகிரி
Published on

சென்னை :

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எளிய தொண்டனாக இருந்த என்னை இவ்வளவு பெரிய இடத்தில் அமரவைத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக், தமிழக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதுதான் எனது முதல் பணி. பா.ஜ.க. அரசு இந்திய வளர்ச்சியையும், அ.தி.மு.க. அரசு தமிழக வளர்ச்சியையும் பின்னுக்கு தள்ளிவிட்டன. அனை வருடைய ஒத்துழைப்போடு தமிழகத்தில் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பாடுபடுவேன்.

நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார், கருணாநிதி. அதேபோல் இப்போது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவதே எங்கள் கடமை.

திருநாவுக்கரசர் சிறந்த செயல் வீரர். கடந்த 2 ஆண்டுகளாக அவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ராகுல்காந்திக்கு நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியில் என்றும் அவருக்கு தனி இடம் உண்டு. அவர் குறைபாட்டின் காரணமாக மாற்றப்படவில்லை. இந்தியா முழுவதும் அமைப்பு ரீதியாக தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் என்ற பொறுப்புகளை பல மாநிலங்களில் ராகுல்காந்தி ஏற்படுத்தி வருகிறார். அதேபோலத்தான் தமிழகத்திலும் ஏற்படுத்தியுள்ளார். வேறு எந்த பிரச்சினையும் இல்லை.

காங்கிரஸ் கட்சிக்குள் கோ‌ஷ்டி பூசல் என்பது தவறு. கருத்து வேறுபாடுகள் ஜனநாயக முறையில் செயல்படும் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்யும். அதை கோ‌ஷ்டி பூசல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எங்களை பொறுத்தவரை கூட்டுத் தலைமை, கூட்டு முயற்சியின் மூலம் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com