

டெல்லி:
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் காரணமாக சுற்றுச்சூழல் மிகுந்த அளவு பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றை மாசுப்படுத்துகிறது.
இந்நிலையில், தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக டெல்லியைச் சேர்ந்த 3 சிறுவர்களின் சார்பில் அவர்களுடைய தந்தையர் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதனால் பட்டாசு வியாபாரிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு போடப்பட்ட தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கியது.
இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் தீபாவளியன்று முதல் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நவம்பர் 1 வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது.