தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை?

தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்
பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்
Published on

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார்.

உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தற்போது, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என அறிவித்துள்ளாதாக தகவல்கள் வெளியாகின.

இதன்மூலம், தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட முடியும். இதனால் அவர்கள் வேலை நாட்களின் போது வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

எனவே தற்போது உள்ள உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சன்னா மரீன் கூறியதாக தெரிகிறது.


இந்த திட்டம் விரைவில் அமலாக வாய்ப்புள்ளதால், இத்திட்டத்திற்கு தொழிலாளர்கள், பல்வேறு துறை ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

பின்லாந்து மக்கள், அந்நாட்டு ஊழியர்கள் அனைவரும் பிரதமரின் அறிவிப்பைக் கேட்டு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பின்லாந்து நாட்டில் ஏற்கனவே 1996-ன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது 3 மணி நேரம் கழித்தோ தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ள அனுமதிக்கிறது.

ஆனால், இத்திட்டம் தொடர்பான தகவலை பின்லாந்து அரசு மறுத்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com