மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த ஆண் பயணிகளிடம் அபராதம் வசூல்

சென்னை மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 1,000 ஆண்களிடம் இருந்து ரூ.2.76 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த ஆண் பயணிகளிடம் அபராதம் வசூல்
Published on

சென்னை:

சென்னை புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ரெயில்வே சொத்துக்களுக்கும் ரெயில் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதுடன் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் ஆண்கள், தண்டவாளத்தை கடப்பவர்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் சென்னை புறநகர் ரெயில்களிலும் பெண்கள் பெட்டியில் பயணம் செய்ததாக ஆண் பயணிகள் 1,000 பேர் பிடிபட்டனர். மொத்தம் 988 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2.76 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதில் 90 சதவீத வழக்குகள் சென்னை நகரில் மட்டும் பதிவு செய்யப்பட்டது. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.500 அபராம் விதிக்கப்படுகிறது.

இதே குற்றத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.73 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறும்போது, ரெயில்களில் பெண் பயணிகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம், பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறுபவர்களை தடுக்க ரெயில் நிலையங்களில் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு போடப்படுகிறது.

4 பெண் காவலர்கள் கொண்ட 2 படை எழும்பூரிலும், 2 படை சென்ட்ரலிலும் பெண் பயணிகள் பாதுகாப்புக்கு தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3 படைகள் ரெயில்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

ரெயில்வேயில் அவசர டெலிபோன் உதவி எண். 182 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதில் தினமும் 100 புகார்கள் வீதம் வருகிறது. ரெயில் பெட்டிகளில் கழிவறை தொடர்பான புகார்களும், தண்ணீர் சம்பந்தமான புகார்களும் வருகிறது என்றும் அதை சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com