மதுரையில் அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பைனான்சியர் அன்புசெழியன்

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் சினிமா பைனான்சியர் அன்பு செழியனும் கலந்து கொண்டார். அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அன்பு செழியன் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பைனான்சியர் அன்புசெழியன்
Published on

மதுரை:

மதுரையில் நேற்று இரவு ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்றினார்.

மேடையில் முதல் வரிசையில் சினிமா பைனான்சியர் அன்பு செழியன் அமர்ந்திருந்தார்.

சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அன்புசெழியன் தற்போது அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூ இல்ல காதணி விழாவிலும் அன்புசெழியன் கலந்து கொண்டார்.

அன்புசெழியன் சினிமா பைனான்சியராக இருந்தாலும் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

எனவே கட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்றதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது அன்புசெழியன் மீதான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் மேல் நடவடிக்கை இப்போதைக்கு எடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது குறித்து அன்புசெழியன் கூறியதாவது:-

நான் மதுரை மாநகர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி பொறுப்பில் இருக்கிறேன். அசோக்குமார் தற்கொலை வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நான் ஓடி, ஒளிய வேண்டிய அவசியமும் இல்லை.

கட்சியில் பொறுப்பில் இருப்பதால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com