கருப்பு பண விசாரணை அறிக்கைகளை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது நிதித்துறை

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வைத்துள்ள கருப்பு பணம் குறித்த விசாரணை அறிக்கைகளை மத்திய நிதித்துறை, பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி உள்ளது.
கருப்பு பண விசாரணை அறிக்கைகளை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது நிதித்துறை
Published on

புதுடெல்லி:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து விசாரிக்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மூன்று அமைப்புகள் நியமிக்கப்பட்டன.

அதன்படி டெல்லியைச் சேர்ந்த பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் தனது விசாரணை அறிக்கையை 2013ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதேபோல் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் தேசிய கவுன்சில் தனது அறிக்கையை 2014ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதியும், பரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் தனது அறிக்கையை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியும் அளித்தன.

இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அரசு சமீபத்தில் நிதித் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிக்கைகள் தற்போது நிலைக்குழுவிற்கு சென்றுள்ளன. நிலைக்குழு அனுமதி அளித்ததும், அறிக்கைகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட கருப்புப் பணத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 770 பில்லியன் டாலர் அளவுக்கு கருப்புப் பணம் இந்தியாவுக்கு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதே காலகட்டத்தில் 165 பில்லியன் டாலர் அளவுக்கு சட்டவிரோத பணம் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com