திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் தேர்தல்: புது வசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில், புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் வெற்றி பெற்றார்.
திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் தேர்தல்: புது வசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் வெற்றி
Published on

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும், புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிட்டார்.

3,400 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2,300 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஒருவர் மொத்தம் 17 பேருக்கு வாக்களிக்க வேண்டி இருக்கும்.

அணி விவரம்:

புது வசந்தம் அணி: தலைவர் - விக்ரமன், செயலாளர் - ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் - பேரரசு, துணைத் தலைவர்கள் - கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி.உதயக்குமார். இணைச் செயலாளர்கள் - ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன் (எ) சோழன்.

புதிய அலைகள் அணி: பொருளாளர் - ஆ.ஜெகதீசன், துணைத் தலைவர் - வி.சுப்பிரமணியம் சிவா, இணைச் செயலாளர் - பி. பாலமுரளி வர்மன், ஜி ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன், ஆ.ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் மாலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  அதில் விக்ரமன் அணியினர் முன்னிலை வகித்தனர்.

இதைதொடர்ந்து வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றது. இயக்குநர்கள் சங்க தலைவர் தேர்தலில் புது வசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதியில், மொத்தம் பதிவான 1,605  வாக்குகளில் 1,533 வாக்குகள் பெற்று விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com