மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் இன்று அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on: 

மதுரை:

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது40). பிரபல ரவுடியான இவர் மீது விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

கடந்த வாரம் இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி முருகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் 101-வது வார்டில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மனைவி மகாலட்சுமி (32) உடனிருந்து கவனித்து வந்தார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மகாலட்சுமி கணவருக்கு காபி வாங்குவதற்காக வெளியில் இருந்த கடைக்கு சென்றார்.

அந்த சமயம் 5 பேர் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. அவர்கள் வேட்டி, சட்டை அணிந்திருந்தனர். முகத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மப்ளர் கட்டி இருந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்துள்ளதால் அவர்கள் மீது ஆஸ்பத்திரியில் இருந்த யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. திடீரென அந்த 5 பேரும் முருகன் சிகிச்சை பெற்ற வார்டுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு கழுத்து, நெஞ்சு உள்பட பல இடங்களில் வெட்டுகள் விழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக எழ முயன்றார். ஆனாலும் ஆத்திரம் தீராமல் 5 பேரும் மாறி மாறி வெட்டியதால் படுக்கையிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து கொலை கும்பல் வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து தப்பி விட்டனர். கடைக்கு சென்ற மனைவி திரும்பி வந்து பார்த்தபோது கணவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது

போலீஸ் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

மதுரை கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திர பாண்டி. சமூக சேவகரான இவர் தான் வசித்து வந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி இருந்தார். இது அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பட்டா ராஜசேகர் என்பவருக்கு பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சந்திரபாண்டி மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அதன் பிறகும் சந்திரபாண்டிக்கும், பட்டா ராஜசேகருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பட்டா ராஜசேகர் வைகை ஆற்றில் ஏ.வி. பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

உயிர் பிழைக்க பட்டா ராஜசேகர் ஆற்றுக்குள் இறங்கி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி சென்ற கும்பல் மைய மண்டபம் அருகே அவரை வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக சேவகர் சந்துரு என்ற சந்திரபாண்டி மற்றும் தற்போது கொலையுண்ட முருகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

பட்டா ராஜசேகர் கொலை செய்யப்பட்டதால் அவரது கூட்டாளிகள் முருகன் மீதும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் தான் இன்று அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து இந்த கொலையை அரங்கேற்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை பிடிக்க நாலாபுறமும் வலை விரித்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X