ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருக்கலாம்: நிபுணர்கள் கருத்து

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இருக்கலாம் என்று நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருக்கலாம்: நிபுணர்கள் கருத்து
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போது எடுத்த வீடியோ நேற்று திடீர் என்று வெளியிடப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டி.டி.வி. தினகரனின் தேர்தல் ஏஜெண்டான வெற்றிவேல் வெளியிட்டார். 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் பழச்சாறு அருந்தும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஆர்.கே.நகரில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்காளர்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த வீடியோ முதல் நாள் வெளியிடப்பட்டதாக தேர்தல் கமி‌ஷனிலும், போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோ சசிகலா எடுத்தது என்றும், அதை சசிகலாவோ, தினகரனோ வெளியிடச் சொல்லவில்லை, தானே தன்னிச்சையாக வெளியிடுவதாகவும், இதுபோல் இன்னும் பல வீடியோ காட்சிகள் தன்னிடம் உள்ளதாகவும் வெற்றிவேல் தெரிவித்தார்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலர் சந்தேகம் எழுப்பினாலும், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் டாக்டர் கிருஷ்ணபிரியா, திவாகரன் மகன் விவேக் ஆகியோர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோதான் என்று உறுதி செய்துள்ளனர்.

இந்த வீடியோ பற்றி நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ உண்மைதான், அதில் எந்தவிதமான கிராபிக்சும் கிடையாது, அதே சமயம் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையில் மங்கலான வெளிச்சமே காணப்படுகிறது.

மேலும் அவர் எதிரில் உள்ள டி.வி. திரையை மட்டும் உன்னிப்பாக கவனிக்கிறார்.வீடியோ எடுக்கும் போது முகத்தை காட்டாமல் ஒரு பக்கமாகவே இருக்கிறார். நேருக்கு நேராக நின்று எடுக்காமல் பக்கவாட்டில் இருந்து எடுத்து இருப்பதால் ஜெயலலிதாவுக்கு தன்னை வீடியோ எடுப்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதியில் இருந்து 30-ந்தேதிக்குள் எடுக்கப்பட்டு இருக்கலாம், ஏனெனில் அந்த சமயத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதா நலம் பெற்று இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியிட்டனர் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியாமலும், போலீஸ் அனுமதி இல்லாமலும் முன் கூட்டியே வீடியோ எடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓராண்டாக ஜெயலலிதா வீடியோ எங்களிடம் உள்ளது என்று கூறி வந்த நிலையில் இப்போது திடீர் என்று வெளியிட்டது ஏன்? முறைப்படி அதை விசாரணை கமி‌ஷனில்தான் ஒப்படைத்து இருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை கமி‌ஷனில் ஒப்படைத்தால் அந்த வீடியோ உடனே மக்கள் பார்வைக்கு வராது என்பதால் திடீர் என்று வெளியிட்டு இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com