கலந்தாய்வு (கோப்புப்படம்)
கலந்தாய்வு (கோப்புப்படம்)

பொறியியல் 2-வது கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் 2-வது கட்ட கலந்தாய்வு நாளை முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகாடமி மற்றும் தொழில் பிரிவுகளுக்கு நடக்கும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Published on

சென்னை:

பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன.

4-வது சுற்றின்படி கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து கடிதம் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இன்று மாலையுடன் இறுதி சுற்று நிறைவடைகிறது.

இதையடுத்து உருவாகும் காலி இடங்களுக்கு துணை கலந்தாய்வு நாளை (28-ந் தேதி) முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகாடமி மற்றும் தொழில் பிரிவுகளுக்கு நடக்கும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. துணை கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக நடத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 6 பிரிவுகளாக கலந்தாய்வு நடக்கிறது.

கட்ஆப் மார்க் 167.50ல் இருந்து 77.50 வரை மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தொழிற்பிரிவு மாணவர்களுக்கு கட்-ஆப் 102-ல் இருந்து பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) வெப்சைட்டில் இருந்து இணைய தள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தபால் மூலம் அழைப்பு கடிதம் பெறாதவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு ஒரினல் சான்றிதழ் மற்றும் அனைத்து நகல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் முதல் கட்டமாக ரூ.5000-மும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி, அருந்ததி இனத்தவர்கள் ரூ.1000-மும் டி.டி. பெற்று வர வேண்டும். ‘The Secratary, TNEA’ என்ற பெயரில் டி.டி.யாகவோ, பணமாகவோ செலுத்தலாம்.

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற இறுதி விவரம் நாளை காலையில் தெரிய வரும்.

இந்த வருடம் குறைந்த கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com