கொரோனா வைரஸ் பீதி - நெல்லை ரெயில் நிலையத்தில் முககவசம் அணிந்து பணிபுரிந்த ஊழியர்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை ரெயில் நிலையத்தில் முககவசம் அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
நெல்லை ரெயில் நிலையத்தில் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்.
நெல்லை ரெயில் நிலையத்தில் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்.
Published on

நெல்லை:

தமிழகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரதுறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நோய் தடுப்பு மருந்துகளை வழங்குகின்றனர்.

தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் மதுரை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்திரவிட்டுள்ளனர். இதையடுத்து நெல்லை ரெயில் நிலைய மேலாளர் இளங்கோவன் மேற்பார்வையில் ரெயில் நிலைய ஓய்வு அறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டனர்.

அதன்படி ரெயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ரெயில்களில் வரும் பயணிகள் யாருக்கேனும் கிருமி தொற்று சந்தேகமிருந்தால் அவர்களை தனிமைப்படுத்த ரெயில்வே பாதுகாப்பு ஓய்வறையில் தனியாக ஒரு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை ரெயில் நிலையத்தில் அனைத்து ஊழியர்களும் முககவசம் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியை பொறுத்த வரை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்களில் வரக்கூடிய மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடிக்கு விமானங்களில் வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலைய ஆணைய குழுமம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறையினர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த மருத்துவ குழுவினர் பயணிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மேலும் பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை சார்பில் விமான நிலையத்தில் அனைவருக்கும் கையில் பூசக்கூடிய மருந்து வழங்கப்பட்டது. மேலும் அடிக்கடி கைகளை கை கழுவுதல் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முககவசம் அணிந்து செல்லும்படியும், பயணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com