திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை

திண்டுக்கல்லில் செலவுக்கு பணம் தாராததால் பாட்டியை பேரன் கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காயமடைந்த தங்கராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
காயமடைந்த தங்கராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் குள்ளனம்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ராமாயி (வயது 82). இவருக்கு தங்கராஜ் (50) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி இறந்து விட்டதால் ராமாயி மகன் தங்கராஜின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

தங்கராஜ் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மருதாயி, மகன் மணிகண்டன் (22) ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

தங்கராஜ், அவரது தாய் ராமாயி மற்றும் பேரன் மணிகண்டன் ஆகியோர் இரவு வேளையில் அப்பகுதியில் உள்ள கடை முன்பாக படுத்து தூங்குவது வழக்கம். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தார்.

அவ்வப்போது தனது பாட்டி ராமாயியிடம் செலவுக்கு பணம் வாங்கிக் கொள்வாராம். நேற்று இரவு வழக்கம் போல் தங்கராஜ், ராமாயி, பேரன் மணிகண்டன் ஆகியோர் அங்குள்ள கடை முன்பு படுத்திருந்தனர். அப்போது மணிகண்டன் ராமாயியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு ராமாயி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த கல்லால் ராமாயியை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த தங்கராஜ் தடுத்தார். இதனால் மணிகண்டன் தங்கராஜையும் கல்லால் தாக்கினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதன் பிறகும் ஆத்திரம் தீராத மணிகண்டன் ராமாயியின் தலையில் கல்லைப் போட்டு விட்டு ஓடி விட்டார். இதனால் பலத்த காயமடைந்த ராமாயி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து தங்கராஜ் திண்டுக்கல் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த தங்கராஜை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com