

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 15) துவங்கிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அவ்வாறு காவல் துறை அதிகாரி ஒருவர் இளைஞரை மிதிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜாமியா மாணவர்களின் போராட்டத்தில் காவல் துறையினரின் செயல் எப்படி இருக்கிறது என்ற கேள்வியுடன் இந்த புகைப்படம் பகிரப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் லக்னோவில் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் ஜாமியா போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
முன்னதாக இதே புகைப்படம் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போதும், வைரலானது. காவல் துறையினரின் போக்கை விமர்சிக்கும் புகைப்படம் எட்டு ஆண்டுகள் பழமையானது ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.