சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் பலி

சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் பலி
Published on

சென்னை:

சென்னை பொழிச்சலூர் லட்சுமி நகரில் வசித்து வருபவர் இத்ரிஸ். இவருக்கு பாகிமா (வயது 8) என்ற மகளும், முகமது (4) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மகன், மகள் இருவருக்கும் காய்ச்சல் இருந்தது.

இதனால் அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றனர். 4 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையவில்லை.

இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 2 குழந்தைகளையும் இத்ரி சேர்த்தார். அப்போது குழந்தைகளின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி முதலில் பாகிமா உயிர் இழந்தார். சிறிது நேரத்தில் முகமதுவும் பரிதாபமாக இறந்தான். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்ததால் ஆஸ்பத்திரியில் மரண ஓலம் கேட்டது. பெற்றோர் கதறி அழுதனர்.

இது போல மதுரவாயல் கார்மேகம் நகர், அரக்காணல் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் லட்சிதா (11). காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இந்த சிறுமியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.

அவளது உடல் நிலையும் மிகவும் மோசமடைந்து நேற்று இரவு இறந்தாள். மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் ஆஸ்பத்திரியில் காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி கீர்த்தனா (11)வும் நேற்று இறந்தார். இதனால் குழந்தைகளின் சாவு எண்ணிக்கை 4 ஆனது.

திருவொற்றியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாமோதரனின் மகள் தர்ஷினி (7) மர்ம காய்ச்சலுக்கு பலியானார். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமியிடம் கேட்டதற்கு, “தமிழகத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.

எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

4 நாட்கள் காய்ச்சல் பாதித்து அதன் பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற முகமது, பாகிமா ஆகியோர் மிகவும் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிக்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியும் காய்ச்சலில் இறந்துள்ளார். இதையடுத்து பொழிச்சலூர், மதுரவாயல் பகுதியில் சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் கொசுக்களை அழிக்கவும், குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com