சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கு ஜெயலலிதா அரசு துணைநிற்கும்: எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கு ஜெயலலிதா அரசு என்றும் துணைநிற்கும் என்றும், வழிபாட்டு உரிமைக்கு என்றும் பங்கம் வராது என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கு ஜெயலலிதா அரசு துணைநிற்கும்: எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை துவா ஓதி, அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திருக்குரான் அருளப்பட்ட மாதம் என்பதால் புனிதமான மாதமாகப் போற்றப்படும் ரம்ஜான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றக் கூறுவதன் மூலம் நோன்பின் மாண்பை இஸ்லாம் நமக்கு வலியுறுத்திக் கூறுகிறது.

இம்மாத நிறைவில் கொண்டாடப்படும் ஈகைத் திருநாள், இஸ்லாத் கூறும் இனிய சமூகம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு மதசார்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை, கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு இந்த ஆட்சி எந்த பங்கமும் வராமல் உறுதியாக பாதுகாக்கப்படும். சிறுபான்மை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்கும் ஜெயலலிதா அரசு என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அன்வர் ராஜா எம்.பி. பேசுகையில், “டெல்லிக்கு (மத்திய அரசுக்கு) நாங்கள் ஒருபோதும் மண்டியிடமாட்டோம். ஆட்சி, கட்சி ஆகியவற்றை காப்பாற்றும் வலிமை எங்களிடம் இருக்கிறது. ஆட்சி என்பது தோளில் போடும் துண்டை போன்றது. ஆனால் கட்சி இடுப்பில் கட்டப்படும் வேட்டியை போன்றது. சிலரின் சதியில் சிக்குவோமேயானால், ஆட்சி என்ற துண்டை தூக்கி எறிந்துவிட்டு, வேட்டி என்ற கட்சியை காப்பாற்றுவோம்” என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் வாழ்த்தி பேசினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com