

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளையும், விவசாயிகளுக்கு ருபே விவசாயக் கடன் அட்டைகளையும் வழங்கி, 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் துவக்கி வைத்தார்.
பிற வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு, மைய வங்கியியல் சேவை 2012ம் ஆண்டு முதல் கூட்டுறவு வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 19 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஏடிஎம் அட்டைகள் வழங்கும் சேவையை துவக்கி வைக்கும் விதமாக 6 வாடிக்கையாளர்களுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளில், மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் கணக்கினை துவக்கியுள்ள 4.56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ருபே விவசாயக் கடன் அட்டைகளை வழங்கும் சேவையை துவக்கி வைக்கும் விதமாக 5 விவசாயிகளுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏடிஎம் அட்டைகளையும், ருபே விவசாயக் கடன் அட்டைகளையும் வழங்கினார்.
இதர வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
இதன் மூலம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள், ஏடிஎம் அட்டை மற்றும் ருபே விவசாயக் கடன் அட்டை வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.