பண மோசடி வழக்கு: ரியா சக்ரபோர்த்தி 7-ந்தேதி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை தொடர்ந்த வழக்கில் ரியா சச்ரபோர்த்தி 7-ந்தேதி பதில் அளிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரியா சக்ரபோர்த்தி, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்
ரியா சக்ரபோர்த்தி, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்
Published on

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.

கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

பண மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டதால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியது.

இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி ஆகஸ்டு 7-ந்தேதி ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com