டர்பன் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி

டர்பனில் நடைபெற்று வந்த தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #SAvAUS
மகாராஜை க்ளீன் போல்டாக்கிய சந்தோசத்தில் ஸ்டார்க்
மகாராஜை க்ளீன் போல்டாக்கிய சந்தோசத்தில் ஸ்டார்க்
Published on

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் எய்டன் மார்கிராம் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் டீன் எல்கர் (9), அம்லா (8), டி வில்லியர்ஸ் (0), டு பிளிசிஸ் (4), டி ப்ரூயின் (36) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


143 ரன்கள் அடித்த மார்கிராம்

6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதேசமயத்தில் ஆஸ்திரேலியா கலக்கம் அடைந்தனர்.

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 283 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் 143 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமூச்சு விட்டனர். மார்கிராம் அவுட்டானதும் தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த பிலாண்டர் (6), மகாராஜ் (0), ரபாடா (0) ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 81 ரன்னுடனும், மோர்னே மோர்கல் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.


83 ரன்கள் எடுத்த குயின்டான் டி காக்

மார்கிராம் அவுட்டான பிறகு தென்ஆப்பிரிக்கா 3.5 ஓவர்கள் விளையாடியதும் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மார்கிராம் 23 பந்துகள் தாக்குப்பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. டி காக் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 92.4 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மிட்செல் மார்ஷ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கும் மார்கிராம்

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com