

புதுடெல்லி:
இந்தியாவில் புதிய மாடல் பைக்கினை வெளியிட்டு இந்திய விற்பனையை விரிவாக்கம் செய்ய டுகாட்டி திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுக்க இயங்கி வரும் டுகாட்டி விற்பனையாளர்கள் புதிய சூப்பர் ஸ்போர்ட் மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட இருக்கும் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் மாடலை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.1-2 லட்சம் வரை செலுத்த வேண்டும். முன்பதிவு கட்டணம் ஒவ்வொரு நகரலும் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் எஸ் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது.
இவற்றின் விலை ஸ்டாக் மாடலுக்கு ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கும் என்றும், சூப்பர் ஸ்போர்ட் எஸ் மாடலின் விலை ரூ.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் மாடல்களின் வடிவமைப்பு டுகாட்டி 959 பேனிகேல் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் ஹெட்லைட்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய மாடலில் எல்இடி DRL-கள் வழங்கப்பட்டுள்ளது. இவை பெரிய சேடிள் மற்றும் சிறிய எக்சாஸ்ட் மஃப்ளர் வழங்கப்பட்டுள்ளது. பேனிகேல் மாடல் டிராக் சார்ந்து பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சூப்பர் ஸ்போர்ட் ஹேன்டில் பார்களில் உயரமான க்ளிப் வழங்கப்பட்டுள்ளது.
இவை ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை கொண்டுள்ள போதும், அதிக சவுகரியத்தை வழங்கும்படி இருக்கிறது. புதிய மாடலில் மாற்றக் கூடிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களை அனைவரும் வாங்கக் கூடிய ஒன்றாக மாற்றும் நோக்கில் புதிய சூப்பர் ஸ்போர்ட் மாடலை தயாரித்துள்ளது.
புதிய டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் மாடலில் 937சிசி, L-ட்வின் டெஸ்டாஸ்ட்ரெட்டா இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 110PS, 9500 rpm மற்றும் 93NM பீக் டார்கியூ மற்றும் 6500 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் சூப்பர் ஸ்போர்ட் மாடலில் ரைடு-பை-வையர், பவர் மோட்ஸ், 3-லெவல் போஷ் ABS யுனிட், 8 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் முழுமையாக மாற்றக்கூடிய ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யுனிட், பின்புற கௌல் மற்றும் குவிக்ஷிஃப்டர் போன்ற வசதிகள் கொண்டுள்ள சூப்பர் ஸ்போர்ட் எஸ் மாடல் இந்தியாவில் கவாசகி நின்ஜா 1000 மற்றும் சுசுகி GSX-R1000F மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.