வாகன ஓட்டுனர்கள் நாளை மறுநாள் முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு

அனைத்து வாகன ஓட்டுனர்களும் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் அறிவுறுத்தியுள்ளார்.
வாகன ஓட்டுனர்கள் நாளை மறுநாள் முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களும் தங்களது வாகனத்தை இயக்கும் போது கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்குவதற்கான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமை தாங்கி பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள், பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களின் ஓட்டுனர்கள் அனைவரும் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை அவசியம் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமத்தின் நகல்கள், கலர் நகல்கள் (ஜெராக்ஸ்) ஆகியவை வைத்திருந்தால் அவை செல்லு படியாகாது. அரசு உத்தரவின்படி நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை இயக்கி செல்லும்போது அவசியம் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்யும்போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களின் உரிமையாளர்களும் இதுகுறித்து தாங்கள் பணிக்கு அமர்த்தி உள்ள ஓட்டுனர்களிடம் அறிவுறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வாகனங்களை இயக்கும் அனைத்து ஓட்டுனர்களும் வாகன போக்குவரத்து விதிகளை கடைபிடித்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com