திராவிட இனம் தலைதூக்க கூடாது என பா.ஜ.க. ஆட்சி செயல்படுகிறது: க.அன்பழகன்

திராவிட இனம் தலைதூக்க கூடாது என்பதை மத்திய பா.ஜ.க. ஆட்சி லட்சியமாக கொண்டு செயல்படுகிறது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் 96-வது பிறந்தநாள் விழாவில் எடுத்த படம்.
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் 96-வது பிறந்தநாள் விழாவில் எடுத்த படம்.
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 96-ம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமை முழக்க கருத்தரங்கம் ஆகியவை நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக க.அன்பழகன் கலந்துகொண்டார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் அன்பழகனுக்கு கட்சி தலைவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர். அவர் எழுதிய ‘வளரும் கிளர்ச்சி’, ‘வாழ்க திராவிடம்’, ‘தொண்டா? துவேஷமா?’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசியதாவது:-

நாம் திராவிடரே என்ற உணர்வு தான் நம்மை தலைதூக்கச்செய்யும். நமது உரிமைகளை மீட்டுத்தரும். தமிழர் வாழ்வும், உரிமையும் அடங்கியது தான் திராவிடன். திராவிடர் என்றால் நாம் மூத்தகுடிகள். நாம் திராவிடர் என்பதை மறந்துவிட்டால் நாம் பெற்றது எல்லாமே பறிபோய்விடும்.

இன்றைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி திராவிடர் இனம் தலைதூக்க கூடாது என்பதை லட்சியமாக கொண்டு மக்களின் மனதை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிக்கொண்டாலும் அவர்களின் உள்மன சிந்தனை வேறுவிதமாக உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

எவ்வளவோ அரும்பாடுபட்டு போராடி பெற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகியும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. அரசமைப்பை செயல்படுத்த வேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில் நடைமுறைப்படுத்தவில்லை.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் துறைகளில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பயன்பெறாத நிலை இருந்து வருகிறது. அரசுத்துறைகள், பொதுத்துறைகள் தனியார் துறைக்கு மாற்றப்படுவதிலும் சமூகநீதி பிரச்சினையும் உள்ளடக்கமாகவே உள்ளது. தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டால் அங்கு இடஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திரைமறைவில் சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com