

சென்னை:
அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் வழங்கப்பட்டன.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு டாக்டர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட டாக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டாக்டர் தொழில் புனிதமானது. அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என்று கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு டாக்டர்களை பணிமாற்றம் செய்தும், சார்ஜ் மெமோ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு டாக்டர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு டாக்டர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.