

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். ஆங்காங்கே சாலை மறியலும் நடந்தது.
ஆம்பூரில் நடந்த போராட்டத்தின்போது பெண் தொண்டர் ஒருவர் தி.மு.க. கொடியுடன் தனி ஆளாக நின்று பஸ்சை மறித்தார். இது டி.வி. மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியது.
இதைப்பார்த்த தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பெண் தொண்டரை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு நிர்வாகிகள் அழைத்து வந்த பெண் தொண்டரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அப்பெண் கூறியதாவது:-
அப்பெண் ஆம்பூரை சேர்ந்த தெய்வநாயகி (54) ஆவார். அவர் கூறுகையில், நான் 34 ஆண்டாக தி.மு.க.வில் இருக்கிறேன். எனது குடும்பமே தி.மு.க.வில் இருக்கிறோம்.
தி.மு.க. நடத்தும் எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்வேன். 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நிறைய செய்து உள்ளனர்.
இலவச மின்சாரம் வழங்கியுள்ளார். இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது பஸ்கள் ஓடுவதை பார்த்து அதை மறிக்க கூடாதா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். பின்னர் தனி ஆளாக சென்று பஸ்சை மறித்தேன்.
கருணாநிதி, மு.க. ஸ்டாலினை தூரத்தில் நின்று பார்த்து இருக்கிறேன். இப்போது நேரடியாக பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
மு.க.ஸ்டாலினிடம் தலைவர் கருணாநிதியை பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த புகைப்படம் எனது பேரக்குழந்தைகள் காலம் காலமாக பார்க்கும்படி இருக்கும்.