

சென்னை:
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி இருக்கை அமைப்பதற்கு ரூ.40 கோடி தேவை என்று அந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்காக தமிழகம் மட்டும் அன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தமிழ் இருக்கைக்காக நிதி வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி, ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மு.ஆறுமுகத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
அப்போது, மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தேமதுர தமிழுக்கு இருக்கை கிடைக்கப் பெறும் அந்த நாள் தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் இன்ப தேன் வந்து பாயும் நாள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை விரைவில் அமைய நல் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
காசோலை வழங்கும் போது, தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, வி.ஜி.ராஜேந்திரன், கு.க.செல்வம், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா மற்றும் தி.மு.க. பிரசார செயலாளர் வக்கீல் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கான மொத்த தொகையையும் ஜூன் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டிய தொகையை முழுவதுமாக செலுத்திவிடுவோம் என்றும், அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மு.ஆறுமுகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews