கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் நோட்டீஸ்

மாணவி அனிதா மரணத்தோடு தொடர்புபடுத்தி பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கிருஷ்ணசாமிக்கு, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் நோட்டீஸ்
Published on

அனிதா மரணத்தில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.சிவசங்கர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் அனிதாவின் மரணத்துடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக எஸ்.சிவசங்கர் தரப்பில் இருந்து கிருஷ்ணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீங்கள் (கிருஷ்ணசாமி) கூறியதின் அடிப்படையில் செய்தித்தாள்களில் வெளியான மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அவதூறு செய்திகள் குறித்து தொகுதியை சேர்ந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் என்னை தொடர்புகொண்டு கேட்டனர்.

இதனால் அவதூறு செய்தி தொடர்பாக ஒவ்வொருவருக்கும், விளக்கம் அளிக்கவேண்டிய சூழல் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

மாணவி அனிதா மரணத்துடன் என்னை தொடர்புபடுத்தி நீங்கள் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கூறியிருப்பது, என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் (கிரிமினல் அவதூறு) கீழ் தண்டிக்கப்படுவதற்கு உரிய குற்றம் ஆகும். உங்களுடைய அவதூறு கருத்துகள் என்னுடைய புகழ் மற்றும் நற்பெயருக்கும், மனதளவில் ஏற்படுத்திய வேதனைக்கும் தந்த இழப்புகள் ஏராளம்.

எனவே அவதூறு கருத்து தெரிவித்தற்காக ரூ.5 கோடி இழப்பீடாக தரவேண்டும். மேலும் 3-9-2017 மற்றும் 5-9-2017 ஆகிய தேதிகளில் மாணவி அனிதா மரணத்தோடு என்னை தொடர்புபடுத்தி நீங்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளுக்காக ஊடகங்களின் மூலமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். நான் அனுப்பிய இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் எனக்கும் எழுத்துப்பூர்வமாக அந்த மன்னிப்பு கடிதத்தை அனுப்பவேண்டும்.

இதனை செய்யாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com