

தருமபுரி,
இரு கைகள் இல்லாதவர்களை விட, தன்னம்பிக்கை இல்லாதவர்களே மாற்று திறனாளிகள் என்பது முயற்சியாளர்களின் ஒருமித்த கருத்து. உடல் உறுப்புகள் இல்லை என்பதை காரணம் காட்டி, கை ஏந்தி பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் கை, கால்களை இழந்த மாற்று திறனாளியாக இருந்தாலும், வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் லட்சிய பாதையை நோக்கி முன்னேறுபவர்கள் நம் நாட்டில் ஒரு சிலரே.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் வெங்கடேசன் என்பவர், சிறு வயதில் மின் விபத்தில் இரு கைககளை இழந்தாலும் ஆசிரியராகவும், நீச்சல் வீரராகவும் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம், எம்.ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் மகன் வெங்கடேசன்.இவர் 5-ம் வகுப்பு படிக்கும் போது விவசாய பணியில் ஈடுப்பட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் தவறுதலாக கை வைத்ததில், மின்சாரம் தாக்கி இரு கைகளும் கருகியது. பின்னர் இரு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன்பிறகு வெங்கடேசன் 10 வயது வரை இரு கைகளுடன் இருந்த போது எப்படி உற்சாகத்துடன் இருந்தாரோ, அதே உற்சாகத்துடன் ஊனத்தை பற்றி கவலை படாமல் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
கால்கள் மூலம் எழுதவும், புத்தகங்களை புரட்டவும், உணவு அருந்தவும் பழகி கொண்ட வெங்கடேசன், தண்ணீரில் நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது என வாழ்ந்து வருகிறார். தருமபுரியில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு சென்னையில் தனியார் கல்லூரியில் பி.எட்., எம்,எட்., படித்து முடித்தவர், விளையாட்டிலும் மற்றவர்களை போல் சாதனை படைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்கம் பதக்கம், வெள்ளி பதக்கம் என பல பரிசுகள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இரு கைகளும் இல்லாமல் பல்வேறு சாதனை செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வெங்கடேசனுக்கு தமிழக அரசு அவரது செந்த ஊரின் அருகே மூக்கனூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கான ஆணை வழங்கியது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சைக்கிள் ஹேண்ட்பாரில் உடலை வைத்து தினமும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்று வருகிறார். போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளிலும் சைக்கிள் ஓட்டி செல்கிறார். தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் எழுதும் வீட்டுப் பாடங்களையும், தேர்வு தாள்களையும் வாயில் பேனாவை வைத்து திருத்தியும், கையழுத்திடுகிறார்.
இந்நிலையில், சர்வதேச மாற்று திறனாளிகளுக்கான போட்டியில், கலந்து கொண்டு, தங்க பதக்கம் வாங்கி நாட்டுக் பெருமை சேர்க்கும் எங்களை போன்ற வீரர்களுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும், வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவி செய்ய வேண்டும். நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் இன்று நிரந்தர பணி இல்லாமல் இருக்கிறேன். எனது நிலமையை கருத்தில் கொண்டு, தமிழக முதல்-அமைச்சர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்பதில் விலக்கு எனக்கு அளித்து, பணியை நிரந்தரம் செய்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
"முடியாது என நினைத்து முடங்கி கிடந்தால், பவுர்ணமி வெளிச்சம் கூட அமாவாசையாகத்தான் இருக்கும், முடியும் என்று நினைத்து முயற்சிப்பவனுக்கு, திரும்பும் திசையெல்லாம் கிழக்கு", "முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும், எழுந்து நடந்தால் இமயமும் உனக்கு வழி கொடுக்கும்" என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டாமல் வாழ்ந்து காட்டும் வெங்கடேசன் சமூகத்தில் மாற்று திறானாளிகளுக்கு ஒரு முன் உதாரணமாக உயர்ந்து நிற்கிறார்.