

அவினாசி:
அவினாசியை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினரால் அவினாசி ஆட்டையம் பாளையத்தை அடுத்து கந்தம்பாளையம் பிரிவு அருகே கோவை மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு வெள்ளை நிற பெயின்ட் அடிக்காமல் விடப்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை.
இதனால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. நேற்று முன் தினம் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வேகத்தடை அருகே வேகத்தை குறைக்காமல் சென்றதால் கீழே விழுந்து காயம் அடைந்தார். அதேபோல் நேற்று மாலை திருப்பூரில் இருந்து வந்த ஒரு பெண் வேகத்தடை இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காலில் அடிபட்டார். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனவே வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் சிக்னல் மின்விளக்கு அமைத்து வேகத்தடை மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். அப்போது தான் விபத்து தவிர்க்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.