உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கிராமங்களில் நூலகங்களை தரம் உயர்தத வேண்டும் - கல்வியாளர்கள் வலியுறுத்தல்

உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கிராமங்களில் தளி, ஜல்லிபட்டி, வாளவாடி, மடத்துக்குளம், பூளவாடி மற்றும் கணியூரில், முழு நேர கிளை நூலகங்கள் உள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கல்வி மாவட்டத்தில், 25க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 3 வட்டாரங்களிலும் 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் 50க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 

இவ்வாறு கல்வி கற்போர் சதவீதம் கணிசமாக இப்பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புக்குப்பிறகு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், அரசு நூலகங்களையே நம்பியுள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கிராமங்களில் தளி, ஜல்லிபட்டி, வாளவாடி, மடத்துக்குளம், பூளவாடி மற்றும் கணியூரில், முழு நேர கிளை நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக முழு நேரமும் நூலகம் திறப்பதில் சிக்கல் உள்ளது.

இதேபோல் பெதப்பம்பட்டி, ராவணாபுரம், சங்கராமநல்லூர், கொமரலிங்கம் கிளை நூலகங்கள், முழு நேர நூலகங்களாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளன. இதுபோல் 10க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்களும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

பகுதி நேர நூலகங்கள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே திறந்திருப்பதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு குறிப்புதவி நூல்களை படித்து தேர்வுக்கு தயார் ஆவதில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு வாயிலாக உடனடி தீர்வாக தற்காலிக பணியாளர்களை நியமித்தாவது அனைத்து  நூலகங்களும் முழு நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் செயல்படும் நூலகங்கள் அனைத்திலும், போதிய கட்டிட வசதி இல்லை.

பெரும்பாலான நூலகங்கள் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் குறிப்புதவி, மழலையர் உட்பட பிரிவுகளை தனியாக செயல்படுத்த முடிவதில்லை. ஆண்டுதோறும்  புத்தகங்களை ஒதுக்கீடு செய்தாலும், போதிய இடவசதி, அலமாரி உட்பட வசதிகள் இல்லை. இதனால் இட நெருக்கடியாக வாசகர்கள் அமர்ந்து படிக்க வேண்டியுள்ளது.

எனவே வாசகர்கள் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு கிராமப்புற நூலகங்களில், கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் வசதிக்காக கழிப்பிடம், குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும். 

இத்தகைய வசதிகளை மேம்படுத்தினால் ‘வாசிப்பை நேசிப்போம்‘ என்ற நூலக ஆணைக்குழுவின் நோக்கம் அனைத்து பகுதிகளிலும் நிறைவேறும். கிராமப்புற இளைஞர்களும் அதிக அளவு பயன் பெறுவார்கள். 

நூலகங்களுக்கு இளைய தலைமுறையினர் வருகை அதிகரிக்கும் போது செல்போன்களில் மூழ்கி கவனச் சிதறல்களுக்கு உள்ளானது உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி மாற்றங்களை கொண்டு வர முடியும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com