

நெல்லை:
நெல்லை மாநகர தனிப்படை போலீசார் நேற்று கே.டி.சி. நகர் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த காரில் வந்த நெல்லை டவுனை சேர்ந்த தொழில் அதிபர் முகமது அசாருதீனி டம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் எவ்வளவு பணம் என்று எண்ணி பார்த்தனர்.
அப்போது காரில் மொத்தம் ரூ.63 லட்சத்து 48 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது தெரியவந்தது. கே.டி.சி. நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாக முகமது அசாருதீன் கூறினார்.
மேலும் பணத்திற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து தனிப் படை போலீசார் அவர்களையும், ரொக்கப்பணத்தையும் நெல்லை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று அந்த பணத்திற்கான ஆவணங்களை வருமான வரித்துறையிடம் தொழில் அதிபர் முகமது அசாருதீன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிடிபட்ட ரொக்க பணத்தை இன்று மீண்டும் தொழில் அதிபரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.