நில இழப்பீடு வழங்கப்படாததால் தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில இழப்பீடு வழங்கப்படாததால் ஜப்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட கல்யாணபுரம் இரண்டாம் சேத்தி செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திரிசங்கு.  திருவையாறில் உள்ள இவரது ஒரு ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டுவதற்காக வருவாய் துறையினரால் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.

அப்போது இந்த நிலத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. இத்தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி வருவாய் துறையினரிடம் திரிசங்கு முறையிட்டார். ஆனால் ரூ. 1.50 லட்சத்துக்கு மேல் தொகை நிர்ணயிக்கப்படாததால், இதுதொடர்பாக தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 1994 ஆம் ஆண்டு திரிசங்கு வழக்கு தொடுத்தார்.

கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவர் ஓய்வு பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை இவரது மகன்கள் பாண்டிய ராம நாராயணன், வெங்கடேசன் நடத்தி வந்தனர். இவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு திரிசங்கு குடும்பத்துக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ. 33.02 லட்சம் இழப்பீடு வழங்குமாறு 2018 ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகியும் இத்தொகை வழங்கப்படாததால், கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அமீனா ஜி. மோகன் முன்னிலையில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் ரஞ்சித், வக்கீல் சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com