மெரினா கடற்கரையில் நம்ம சென்னை ‘செல்பி’ பகுதியை சேதப்படுத்திய வாலிபர்கள்

மெரினா கடற்கரைக்கு வரும் வாலிபர்கள் இந்த நம்ம சென்னை எழுத்துக்களின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுப்பது, அதில் ஏதாவது எழுதுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நம்ம சென்னை
நம்ம சென்னை
Published on

சென்னை மெரினா கடற்கரை ராணி மேரி கல்லூரி எதிரே நம்ம சென்னை ‘செல்பி’ பகுதி உள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நம்ம சென்னை என்ற வார்த்தைகள் அச்சுக்கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நம்ம சென்னை பகுதி கடந்த 2020-ம் ஆண்டு ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதன் உயரம் சுமார் 10 அடி ஆகும். இதன் அருகில் இருக்கை பகுதிகளும் உள்ளன.

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ‘நம்ம சென்னை’ வடிவமைப்பின் முன்பு நின்றபடி செல்பி எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில மெரினா கடற்கரைக்கு வரும் வாலிபர்கள் இந்த நம்ம சென்னை எழுத்துக்களின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுப்பது, அதில் ஏதாவது எழுதுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நம்ம சென்னை எழுத்துக்கள் பொலிவை இழந்திருப்பதுடன் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மெரினா போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் செய்துள்ளனர். மேலும் நம்ம சென்னை பகுதியை சுத்தம் செய்யும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஓருவர் கூறுகையில், நம்ம சென்னை செல்பி பகுதி சேதப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு தடுப்புக்குள் இருக்கவேண்டும். பொதுமக்கள் மனது வைத்தால் தவிர பொது சொத்துக்களை பாதுகாக்க வழியில்லை. இந்த நம்ம சென்னை பகுதியை சீரமைக்க அனுமதி பெற்றோம். இந்த வாரம் வண்ணப்பூச்சு வேலைகளை தொடங்குவோம் என்றார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நம்ம சென்னை செல்பி பகுதி பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ளது. இது சுற்றுலாதளம் ஆகும். சென்னைக்கு சுற்றுலா வரும் அனைவருமே இந்த நம்ம சென்னை பகுதியில் நின்றபடி செல்பி எடுப்பது வழக்கமாகவே உள்ளது. இதில் செல்பி எடுப்பதற்கு நேரக்கட்டுப்பாடு கிடையாது. 24 மணி நேரமும் இதன் அருகில் நின்றபடி பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள்.

கட்டுப்பாடு எதுவும் இல்லாததால் இந்த பகுதி சிதைக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை பாதுகாத்து பராமரிக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும். இரவு 11 மணிக்கு பிறகு இதன் அருகில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படக்கூடாது. அப்போதுதான் இதனை பாதுகாக்க முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com